தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில்
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுதல் தொடர்பாக நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை கரும்புக்கடை பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
இதே போல, தென்காசி அருகே உள்ள பண்பொழியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் பயாஸ் அஹமது கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டித்து ஏராளமான பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு அதிவிரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நிர்வகித்து வரும் அறிவகம் மதரசாவில் அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து அந்த அமைப்பினர் ஒன்று திரண்டு கோஷங்களை எழுப்பியதால் பதட்டமான சூழல் நிலவியது. இதனால், அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நடைபெறும் சோதனையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சிலரது வீட்டில் இருந்து லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடலூர், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் அமைப்பின் மாவட்ட தலைவர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடந்த சோதனையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையுடன் இணைந்து போலீஸார் அந்த அமைப்பின் நிர்வாகிகளை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.