கோயம்புத்தூரில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய அழகு நிலைய ஊழியரை காதலர்களை வைத்து கொலை செய்து மரம் அறுக்கும் எந்திரம் மூலம் உடலை துண்டு துண்டாக்கி வீசிய பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குப்பையில் கிடந்த கையை வைத்து கொலை வழக்கில் துப்புதுலக்கிய சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
கோயம்புத்தூர் துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் துண்டிக்கப்பட்ட கை ஒன்று ரத்தம் சொட்ட கவரில் வைத்து வீசப்பட்டுள்ளதாக துப்புரவு பணியாளர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட கையை மீட்டு விசாரணையை முன்னெடுத்தனர். அந்த கைகள், கோவை சரவணம்பட்டியில் தங்கியிருந்து காந்திபுரம் அழகு நிலையத்தில் வேலைபார்த்து வந்த ஈரோடு, சூரம்பட்டியை சேர்ந்த பிரபு என்பவருடையது என தெரியவந்தது.
கடந்த 14ஆம் தேதி இரவு மாயமானதாக அவரது மனைவி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பிரபு மாயமான நேரமும், கை மீட்கப்பட்ட நேரமும் ஒத்துப் போனதை வைத்து கைரேகை ஆய்வுக்குட்படுத்தி அந்த கை பிரபு உடையது தான் என்பதை உறுதி செய்தனர்.
பிரபுவின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்து அவருடன் கடைசியாக பேசிய கவிதாவை பிடித்து விசாரித்த போது 20 நாட்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொடூர கொலைச்சம்பவம் அம்பலமானது.
கொல்லப்பட்ட பிரபு முதல் மனைவியை பிரிந்து 2 வது மனைவியுடன் ஈரோட்டில் வசித்து வந்தார். கோவை அழகு நிலையத்திற்கு பணிக்கு வருவதற்கு சில வருடங்களுக்கு முன்பாக ஹெர்போஹேர் நிறுவன விற்பனை பிரதி நிதியாக இருந்த போது பிரபுவுக்கும், சரவணம்பட்டி கவிதாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தில் கோவைக்கு மீண்டும் வேலைக்கு வந்த முன்னாள் காதலன் பிரபுவை தனது வீட்டருகே தனி வீடு ஒன்றை பார்த்து குடி வைத்துள்ளார் கவிதா.
அந்த வீட்டில் கவிதாவுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்ட பிரபு அதனை வைத்து மிரட்டி கவிதாவிடம் பணம் பெற்று வந்துள்ளான். இது குறித்து கவிதா தனது தற்போதைய காதலர்களான அமுல்திவாகர் மற்றும் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் பிரபுவை துண்டு துண்டாக வெட்டி வீசுவது என முடிவு செய்து மரம் அறுக்கும் எந்திரம், அதனை பயன்படுத்த சுவிட்ஜ் போர்டு, பிளாஸ்டிக் பைகள் போன்ற வற்றை வாங்கி தயாராக வைத்துக் கொண்டு 20 நாட்களாக பிரபுவை நோட்டமிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு கவிதாவுக்கு வீட்டில் பிரச்சனை என்று பிரபுவை செல்போனில் அழைத்துள்ளனர். பிரபு சென்றதும் அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். அவரது சடலத்தை வீட்டு மாடிக்கு தூக்கிச்சென்று ஏற்கனவே தயாராக வைத்துஇருந்த மரம் அறுக்கும் எந்திரத்தை வைத்து துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து மூன்று இடங்களில் வீசியது தெரிய வந்தது.
தலை , உடல் மற்றும் ஒரு கையை தனி தனி பிளாஸ்டிக் கவரில் கட்டி துடியலூர் அருகே இருந்த ஒரு கிணற்றிலும், இரு கால்களை வெள்ளலூர் குப்பை கிடங்கிலும் வீசி உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் துடியலூர் அருகே உள்ள கிணற்றில் இருந்து பிளாஸ்டிக் கவரில் தனி தனியாக அடைத்து வீசப்பட்டிருந்த தலை மற்றும் உடல் பாகங்களை மீட்ட போலீசார் பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பீளமேடு மற்றும் வெள்ளக்கிணரு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் வீசப்பட்ட உடல் பாகங்களை தேடி தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக காதலி கவிதா, அமுல்திவாகர், கார்த்திக் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தில் பிரபுவின் ஆதார் கைரேகை அடிப்படையில் போலீசார் முதலில் துப்பு துலக்கியது குறிப்பிடதக்கது.