திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சிட்டி யூனியன் வங்கிக்குள் துப்பாக்கியுடன் புகுந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியதோடு, அதனை தனது முகநூல் பக்கத்திலும் நேரலை செய்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த திருமலை சாமிகள் என்பவர் இடி மின்னல் சங்கமம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்து திறந்த ஜீப்பில் கையில் துப்பாக்கியுடன் மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்கு சென்றார்
வங்கி காவலாளியை கதவை திறந்துவிடச்சொல்லி துப்பாக்கியுடன் திருமலை சாமியார் வங்கிக்குள் நுழைந்ததும் அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். கொள்ளை அடிக்க வந்ததாக கூறி ஊழியர்களை மிரட்டியதோடு, துப்பாக்கியை ஒரு சேரில் வைத்துவிட்டு அலுவலகத்தில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு கொண்டு புகைப்பிடித்தார்
வங்கியின் அலாரம் சத்தம் கேட்டு அங்கு வந்த சில அரசியல் பிரமுகர்கள் அந்த சாமியாரை சமரசம் செய்து வெளியே அழைத்துச்சென்றனர். அத்தனை காட்சிகளையும் அவர் தனது முக நூல் பக்கத்தில் நேரலை செய்துள்ளார்.
முன்னதாக தனது மகளுக்கு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்ததாகவும், அதற்கு வங்கி அதிகாரிகள் முறையாக பதிலளிக்கவில்லை என்ற ஆத்திரத்திலேயே சாமியார் இதுபோல அத்துமீறியதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அலாரம் ஒலித்தும் அங்கு போலீஸ் வராததால் வங்கியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த மிரட்டல் சம்பவம் குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் சாமியார் திருமலையின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்