திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் செய்த பாலியல் சீண்டல் குறித்து மாணவிகள் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாத ஆசிரியை மீது போக்ஸோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவமானம் தாங்காமல் ஆசிரியை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கடந்த 8 ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் லில்லி. இவருக்கு குணசேகரன் என்பவருடன் திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.
இந்த பள்ளியில் வேலைபார்த்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் மோகன் தாஸ் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக மாணவிகள் சிலர் ஆசிரியை லில்லியிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் லில்லி அதனை பெரிதாக கண்டுகொள்ளாமலும், ஆசிரியரை கண்டிக்காமலும் இருந்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் ஆசிரியர் மோகன்தாஸ் செய்த அத்துமீறல் உறுதி செய்யப்பட்டு அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆசிரியை லில்லி மாணவிகள் தெரிவித்த புகாரை அலட்சியப்படுத்தியதால் போக்சோ வழக்கில் 2 வது குற்றவாளியாக லில்லியை போலீசார் சேர்த்ததாக கூறப்படுகின்றது
இதற்கிடையே பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியை லில்லியை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்தனர். இதனால் அவமானப்படுத்தபட்டதாக உணர்ந்த லில்லி , எங்கே போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளிக்கு பொறுப்பாக தலைமை ஆசிரியர் இருக்க அவரை விட்டு தனது மனைவி மீது ஒரு தலைபட்சமாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், பள்ளியில் கொடுக்கப்பட்ட அழுத்தமே தனது மனைவியின் உயிரிழப்புக்கு காரணம் என்று அவரது கணவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.