திருச்சியில் 10 மாதத்தில் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி கோடிகளை சுருட்டிச் சென்ற எல்பின் நிதி நிறுவனத்திற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் தனிக்குழு அமைத்து ஏமாற்றியவர்களை தேடிப்பிடித்து கடத்திச்சென்று அடித்து உதைத்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
கோட்டு சூட்டு போட்டு பாஸ் போல பவுன்சர்கள் புடை சூழ ஹெலிகாப்டரில் வந்திறங்கும் இவர் தான் திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த எல்பின் நிதி நிறுவன பங்குதாரர்களின் ஒருவரான ‘சீட்டிங்’ ராஜா..!
ராஜா இவரது சகோதரர் ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து தங்கள் நிதி நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் 10 மாதத்தில் 2 மடங்காக திருப்பித்தரப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஏராளமான முதலீட்டாளர்களிடம் இருந்து 400 கோடி ரூபாய் பணத்தை மொத்தமாக வாரிச்சுருட்டினர்.
இந்த மோசடி வழக்கில் ராஜா , ரமேஷ் உள்ளிட்ட 18 பேர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவரது சொத்துக்களை வழக்கில் சேர்க்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அறம் மக்கள் அறக்கட்டளை என்ற பெயரில் தங்களை சமூக சேவகராக காட்டிக் கொண்ட இந்த டுபாக்கூர் ராஜாவும் , ஜேப்படி ரமேஷும், மக்களுக்கு இலவசமாக பட்டாசு கொடுப்பதற்காக சிவகாசியை சேர்ந்த பட்டாசு ராஜா என்பவரிடம் 5 கோடி ரூபாய்க்கு பட்டாசு பெற்று ஏமாற்றி உள்ளனர்.
ஏற்கனவே 15 மோசடி வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் ராஜா, ரமேஷ் மோசடி கும்பல் ஜாமீன் பெற்று வெளியில் வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை தடுக்கவும், தாங்கள் இழந்த பணத்தை பெறுவதற்கும் இராமநாதபுரத்தை சேர்ந்த மணி பெரியசாமி தலைமையில் புரட்சிக்குழு என்ற பெயரில் தனிக்குழு ஒன்று உருவாகி உள்ளதாக கூறப்படுகின்றது.
மோசடி செய்த பணத்தை சீட்டிங் ராஜா கும்பல் பல்வேறு ஊர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராஜாவை ஜாமீனில் எடுக்க உதவி வரும் அவரது உறவினர்களை பிடித்துச்செல்லும் பாதிக்கப்பட்டோர், அவர்களை கட்டி வைத்து அடித்து நொறுக்கி வருவதாக, சொல்லப்படுகிறது.
போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பி வெளியில் சுதந்திரமாக சுற்றித்திரியும் மோசடி கும்பலை சேர்ந்தவர்களை பிடித்து வாயில் துணியை வைத்து, கால்களை விரித்து உடல் எங்கும் அடித்து உரித்து தங்கள் பணத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் பாதிக்கப்பட்டவர்கள் உறுதியாக உள்ளதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து மோசடி மன்னன் ராஜாவின் தரப்பினரோ, தாக்குதலில் இருந்து தப்பிக்க எண்ணி போலீசில் கடத்தல் புகார் அளித்து வருகின்றனர். இந்த மோசடி கும்பலுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் வெளியில் விட்டால் சம்பந்தப்பட்டவர்களை தாக்குவோம் என்று வாட்ஸ் அப் வாயிலாக பாதிக்கப்பட்டோர் குரல் எழுப்பி வருகின்றனர்
பெரும்பாலான மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்கள் கோடிகளுடன் தப்பி விடும் நிலையில் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை தேடிச்சென்று பாதிக்கப்பட்டவர்கள் தர்ம அடி கொடுத்து வருவதால், ஜாமீன் மனு தாக்கல் செய்ய முக்கிய தலைகள் அஞ்சுவதாக தகவல் வெளியாகி உள்ளது.