1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மதுரையில் இன்று துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றெண்ணி இத்திட்டத்தை செயல்படுத்தியதாக தெரிவித்தார்.
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த திட்டத்தை துவக்கி வைக்க மதுரைக்கு சென்ற முதலமைச்சர், அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை ஒட்டி, நெல்பேட்டை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, நெல்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள நவீன சமையல் கூடத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு உணவு விநியோகம் செய்வதற்கான வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேச்சியம்மன் படித்துறை அருகேயுள்ள ஆதிமூலம் மாநகராட்சி துவக்கிப் பள்ளிக்கு சென்ற முதலமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார். பின்னர் ரவா கிச்சடி, சாம்பார் ஆகிய உணவுகளை குழந்தைகளுக்கு பரிமாறினார்.
குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு உணவை ஊட்டிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம் என்றார். எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்க இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.