2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது லெட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட நிலையில், தன்னை காத்திருக்க வைத்து அசிங்கப் படுத்திவிட்டதாக அவர், அதிகாரிகளிடம் ஆதங்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது உச்சிதனை முகர்ந்தால் படத்தில் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த விருதை பெறுவதற்காக மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கம் வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு விருது பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு விருதுகள் கொடுத்து முடிக்கப்பட்ட நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனின் பெயர் அழைக்கப்படவில்லை.
இதனால் ஆவேசமான அவர் நேரடியாக மேடைக்கு செல்லும் வழியில் நின்ற செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளிடம், தன்னை வரவைத்து அசிங்கப்படுத்தியது ஏன்? என்று ஆதங்கப்பட்டார்.
அங்கிருந்தவர்கள், அவரை மேடையில் ஒரு பகுதியில் அமரச்சொல்லி சமாதானப் படுத்தியதோடு , விடுபட்ட விருதையும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வழங்கி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விழா சிறப்பாக இருந்ததாக மகிழ்ச்சி பொங்க கூறியவாறு அங்கிருந்து சென்றார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.