சென்னை வேப்பேரி ஜெயின் கல்லூரியின் 4ஆவது மாடியின் படிக்கட்டில் பற்கள் உடைந்த நிலையில் மாணவி சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த சுனில் சர்மா - சீமா ஷர்மா தம்பதியரின் 19 வயது மகள் ரோஷினி சர்மா. சுனில் சர்மா மிண்ட் தெருவில் சொந்தமாக மருந்தகம் நடத்தி வரும் நிலையில் ரோஷினி சர்மா வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார்.
சதுர்த்தி கால விடுமுறை முடிந்து இன்று கல்லூரி திறக்கப்பட்டது. முதல் நாள் என்பதால் ரோஷினி சர்மா வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுள்ளார். காலை 8 மணிக்கு வகுப்புகள் தொடங்கிவிடும் நிலையில் ரோஷினி சர்மா 30 நிமிடம் தாமதமாக கல்லூரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் நான்காவது மாடியில் உள்ள தனது வகுப்பிற்கு ரோஷினி சர்மா வேகமாக படிக்கட்டில் ஏறி சென்றதாகவும் , அவர் வகுப்புக்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதற்கிடையே நான்காவது தளத்தின் அவ்வழியாக வகுப்பறைக்கு நடந்து சென்று கொண்டிருந்த பேராசிரியை ஒருவர், மாணவி ரோஷினி குப்புற படுத்த நிலையில் படிக்கட்டில் விழுந்து கிடந்ததை பார்த்து கூச்சலிட்டுள்ளார்.
மற்றவர்கள் ஓடி வந்து மாணவியை தூக்கி பார்த்துள்ளனர். மூச்சு பேச்சில்லாமல் முகத்தில் காயமடைந்து காணப்பட்ட ரோஷினியின் வாயில் சில பற்கள் உடைந்திருந்தது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. மாணவி கீழே விழுந்து கிடந்த இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாததாலும், வகுப்பறை தொடங்கியதால் அந்தப்பகுதியில் மாணவிகள் யாரும் பார்க்காததாலும் மாணவியின் எப்படி உயிரிழந்தார் ? என்பது தெரியவில்லை.
அதே நேரத்தில் வேகமாக படிக்கட்டில் ஏறிய போது கால் இடறி கீழே விழுந்தாரா ? உடல் நலக்குறைவால் மயங்கி மாடிப்படிக்கட்டுக்களில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறேதும் காரணமா ? என வேப்பேரி போலீசார் சம்பவ இடத்தில் னேரடி ஆய்வு மேற்கொண்டு, கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மாணவி ரோஷினியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.