பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கு ஸ்ரீமதியின் தாய் தந்தை தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிசிஐடி போலீசார் மாணவியின் மரணம் கொலை என தெரிந்தால், நிச்சயம் கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு விசாரணையின் போது மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் , ஜாமீன் வழங்ககூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தங்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்
பள்ளி தாளாளரின் மகன்களிடம் இன்று வரை விசாரணை நடத்தப்படவில்லை எனவும், முதல் மற்றும் இரண்டாவது என இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்கும் வேறுபாடுகள் உள்ளதாகவும், உடல் முழுவதும் காயங்கள் உள்ளதாகவும், சில இடங்களில் கைரேகைகள் பதிவாகி உள்ளதாகவும் 2 வது பிணகூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தங்களது மகள் எழுதியது என்று போலீசாரால் வாசித்துக்காட்டப்பட்ட தற்கொலை கடிதம் போலியானது என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆய்வாளர் ஆகியோரின் நடவடிக்கைகள் மீதும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து சிபிசிஐடி போலீசாருக்காக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், விசாரணையின் முடிவில் மாணவியின் மரணம் கொலை என தெரிய வந்தால், நிச்சயமாக கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என உத்தரவாதம் அளித்தார்
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளந்திரையன், முதலில் ரவிக்குமார் , சாந்தி உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அப்போது பள்ளி முதல்வர் சிவசங்கர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த மனு விசாரணைக்கு பட்டியலிடபடவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கும் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது சிபிசிஐடி காவல்துறை சார்பில் ஜாமீன் நிபந்தனைகள் கடுமையாக இருக்க வேண்டும் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து மனுக்கள் மீதும் பின்னர் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.