மயிலாடுதுறை அருகே 4 லட்சம் ரூபாய் கூடுதல் வரதட்சனை கேட்டு வாங்கிவராத ஆத்திரத்தில் புதுப்பெண்ணுக்கு உயிரோடு தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதலர் தினத்தில் கணவனை கைப்பிடித்த பெண் வரதட்சனை கொடுமையால் கருகி பலியான சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் கரைமேடு கிராமத்தில் வசிக்கும் மோகனசுந்தரம் - உஷாராணி தம்பதியரின் மூத்த மகள் தர்ஷிகா .இவருக்கும் , மேலமாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாயகிருஷ்ணன் - ஜெகதாம்பாள் தம்பதியினர் மகன் கார்த்தி என்கிற பாலமுருகனுக்கும் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது சீர்வரிசையாக 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருமணமான 2 மாதத்தில் கணவன் ஒப்பந்தபணி எடுத்து வேலை செய்ய மேலும் 4 லட்சம் ரூபாய் கூடுதல் வரதட்சனையாக வாங்கிவரச்சொல்லி மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டதால் மன உளைச்சல் தாங்காத தர்ஷிகா கோபித்துக் கொண்டு தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதனால் ஊர் முக்கியஸ்தர்கள் மாப்பிள்ளை வீட்டாரிடம் சமாதானம் செய்து வைத்து கடந்த ஜூன் 5-ஆம் தேதி கணவர் வீட்டில் சேர்த்து வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதி தர்ஷிகா உடலில் கொதிக்கும் வெண்ணீரை ஊற்றிக் கொண்டதாக தாய் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் அங்கு சென்று பார்த்த போது அவரது கழுத்து பகுதியில் இருந்து கீழ் வரை தீயில் கருகி எரிந்தது தெரிய வந்தது. அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த தர்ஷிகா ஆகஸ்ட் 23-ஆம் தேதி சிக்ச்சை பலன் இன்றி மருத்துவமனையில் காலமானார். இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கணவர் பாலமுருகன் மற்றும் மாமியார், மாமனார் உள்ளிட்ட உறவினர்கள் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி மண்ணெண்னை ஊற்றி உயிரோடு கொளுத்திவிட்டதால் தீக்காயம் அடைந்த தங்கள் மகள் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்ததாக குற்றச்சாட்டிய தர்ஷிகாவின் பெற்றோர், சிகிச்சையில் இருந்த போது அந்த பெண் வாக்குமூலம் அளித்த வீடியோவையும், தர்ஷிகா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எழுதி வைத்திருந்த கடிதங்களையும் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியிடம் ஒப்படைத்தனர்.
30-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்று புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரை பெற்றுக் கொண்ட சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தர்ஷிகாவின் உடலில் ஊற்றப்பட்டது பெட்ரோலும் அல்ல, மண்ணெண்ணையும் அல்ல வேறு ஏதோ ஒரு வீரியமான திரவ பொருளை ஊற்றி எரித்து உள்ளனர் என்றும் எனவே சடலத்தை முறைப்படி பிணக்கூறாய்வு செய்வதற்காக, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.