சேரும் சகதியுமாக உருக்குலைந்து காணப்பட்ட தனது கிராம சாலையை சரிசெய்வதற்காக தனது திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 10 லட்சம் ரூபாயை பங்களிப்பு தொகையாக செலுத்தி மென்பொறியாளர் ஒருவர் தனது கிராம மக்களின் பயன் பாட்டிற்காக கான்கிரீட் சாலை அமைத்துள்ளார்...
2 லட்சம் ரூபாய் இருந்தா சிம்பிளா திருமணம்.... 5 லட்சம் ரூபாய் இருந்தா கொஞ்சம் ஆடம்பரமா திருமணம் ... 10 லட்சம் ரூபாய் இருந்தா செம பந்தாவா திருமணம் என்று திட்டமிடும் மாப்பிள்ளைகளுக்கு மத்தியில் மக்களுக்கு நல்ல சாலை போட்டுத்தந்த நல்லுள்ளம் கொண்ட மாப்பிள்ளை சந்திரசேகர் இவர் தான்..!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நல்லாவூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் - லட்சுமி தம்பதியின் இளைய மகனான சந்திரசேகர். சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகின்றார்.
கொரோனா கால கட்டத்தில் இருந்து தனது சொந்த ஊரில் இருந்து பணியை மேற்கொண்டு வரும் சந்திரசேகருக்கு தான் படிக்கின்ற காலம் தொட்டு தனது கிராமத்தில் உள்ள ஒரு சாலை உருக்குலைந்து நடப்பதற்கே தகுற்ற நிலையில் இருப்பதை கண்டு வேதனை அடைந்துள்ளார்.
குறிப்பாக அண்மையில் பெய்த மழையால் அந்த சாலை சேரும் சகதியுமா காட்சி அளித்த நிலையில் அந்த சாலையை மேம்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து சாலையின் அவல நிலை குறித்து எடுத்து கூறி இருக்கிறார்.
தற்போதைக்கு உடனடியாக சாலை அமைத்துக் கொடுக்கும் அளவுக்கு அரசிடம் போது மான நிதிஇல்லை என்று வழக்கம் போல அவர் கைவிரித்ததால், தனது திருமண செல்விற்காக சேர்த்து வைத்துள்ள 10 லட்சம் ரூபாயை தான் தருவதாகவும் அதனை வைத்து சாலை அமைத்துக் கொடுக்க இயலுமா ? எனக் கேட்டுள்ளார் சந்திர சேகர்.
அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் உள்ளூர் பயனாளிகளின் பங்களிப்புடன் சாலை அமைத்துக் கொடுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. மென் பொறியாளர் சந்திர சேகர் தனது பங்களிப்பாக 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனின் அனுமதியுடன்அந்த கிராமத்தில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. 14 அடி அகலத்தில் 270 மீட்டர் கொண்ட அதாவது கால் கிலோ மீட்டர் தொலைவிற்கு தரமான கான்கிரீட் சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டது.
தன் வீட்டு முன்பு சிமெண்டு கலவை கொட்டிஉயர்த்துவோர் மத்தியில் தங்கள் பகுதி மக்களுக்காக கால் கிலோ மீட்டர் நீளத்துக்கு சிமெண்டு சாலை அமைத்துக் கொடுத்த புது மாப்பிள்ளை சந்திர சேகரை கிராமமக்கள் பாராட்டி வருகின்றனர்.