சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 2 வது மாடியில் இருந்து 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற தகவல் அறிந்து தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் விஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி செவ்வாய் கிழமை காலையில் 9:00 மணி அளவில் பள்ளியின் ரெஸ்ட் ரூம் சென்று இரண்டு கைகளின் நரம்பை பிளேடால் அறுத்துக் கொண்டார்.
சக மாணவிகள் பார்த்துவிட்டு பள்ளி நிர்வாகத்திடம் சொல்வேன் என்று கூறியதால் அங்கிருந்து பள்ளியின் மாடிக்கு ஓடிச்சென்ற அந்த மாணவி இரண்டாவது தளத்திலிருந்து கீழே குதித்து விட்டார் .
சத்தம் கேட்டு அங்கு வந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பூச்சிக் கொல்லி மருந்து குடித்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த மாணவனையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர்.
மாணவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒரே ஊரை சேர்ந்த அந்த மாணவியும், மாணவனும் ஒரே இடத்தில் டியூசன்னுக்கு சென்ற போது ஒன்றரை வருடமாக பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்து இருவரின் பெற்றோரும் கண்டித்ததோடு டியூசனுக்கு செல்வதை நிறுத்த போவதாக கூறியதால், தாங்கள் சந்திக்க இயலாது என்ற விரக்தியில் இருவரும் முன் கூட்டியே பேசி வைத்துக் கொண்டு காலை 9 மணிக்கு இந்த விபரீத முடிவை தேடிக் கொள்ள முயன்றது தெரியவந்துள்ளது.
தற்போது இவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரது நோட்டு புத்தகங்களின் எழுதி வைத்திருந்த குறிப்புகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.