தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை கழகத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், ஏற்கனவே இருவர் கைதான நிலையில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் அடுத்த கிடாரம் கொண்டான் பகுதியில் உள்ள திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில், கடந்த 5-ம் தேதி முதல் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வரும் நிலையில், நேற்று பி.ஏ பொலிடிகல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வு நடைபெற்றது.
தேர்வறையில் இருந்த பேராசிரியர், மாணவர்களின் ஹால்டிக்கெட் உள்ளிட்டவற்றை சரிபார்த்து வந்தபோது, பாஸ்கர் என்பவருக்கு பதிலாக வேறொரு நபர் தேர்வெழுதியதை கண்டறிந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த திவாகரன் என்பதும், தான் யாருக்காக தேர்வெழுதுகிறொம் என்பது தெரியாது என கூறிய அவர், திருவாரூர் பாஜக மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ், தன்னை தேர்வு எழுத அனுப்பியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தேர்வு மைய கண்காணிப்பாளர் நாகரத்தினம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார், திவாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே, தனக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பில்லை என சமூகவலைதள பக்கங்களில் கருத்து பதிவிட்ட பாஸ்கரை போலீசார் தேடி வந்த நிலையில், தகவலின் பேரில் மடப்புரத்தில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் இருந்த அவரை கைது செய்தனர். கைதான பாஸ்கர் மீது கூட்டுசதி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.