கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், கஞ்சா மற்றும் போதைப்பொருட்களால் இளைஞர் சமுதாயமும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியரும் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவ மாணவியர் போதைப் பழக்கத்துக்கு ஆளாவதும் அவர்களை இதிலிருந்து மீட்க முடியாமல் பெற்றோர்கள் தவிப்பதும் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் சமுதாயத்தைப் போதையின் பிடியில் இருந்து மீட்க ஆக்கப்பூர்வமான வழிகளைக் கையாண்டு காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.