சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குள் மூதாட்டி மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி விட்டு ,வெளியில் நடந்த விபத்து போல நாடகமாடிய அரசு மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் விபத்து அவசரகால சிகிச்சை பிரிவுக்கு கடந்த 8 ந்தேதி இரவு 70 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
9ந்தேதி அந்த மூதாட்டி சிகிச்சை பலன்றி உயிரிழந்த நிலையில் அவர் யார் ? எப்படி இறந்தார் ? எங்கு விபத்தில் சிக்கினார்? என்ற விபரம் ஏதுமின்றி வழக்கை விசாரித்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் மூதாட்டியின் படங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மூதாட்டியை தூக்கி வந்து சிகிச்சைக்காக சேர்த்தது மருத்துவமனை ஊழியர்கள் என்பதை சிசிடிவி மூலம் அடையாளம் கண்ட போலீசசர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தனர்.
அந்த மூதாட்டி பல்லாவரத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கியதால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்த நிலையில் பல்லாவரம் போலீசாரிடம் விசாரித்த போது அங்கு அப்படி எந்த ஒரு விபத்தும் நடக்கவில்லை என்று தெரியவந்தது.
இதற்கிடையே மூதாட்டியின் புகைப்படத்தை வைத்து அவர் 70 வயதான லூசியனா என்பதையும் அவரது மகன் மன நிலை சரியில்லாத தாயை காணவில்லை என்று புகார் அளித்திருப்பதாக காசிமேடு போலீசார் தெரிவித்தனர்.
அவரது மகனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு ஸ்ட்ரச்சர் எங்கிருந்து எடுத்து வரப்படுகின்றது ? என்பதை ஒவ்வொரு சிசிடிவி காட்சிகளாக ஆய்வு செய்த போலீசார், மருத்துவமனை பார்க்கிங் பகுதியில் இருந்து மூதாட்டி தூக்கி வரப்பட்டதை கண்டுபிடித்தனர்.
கடந்த 8 ந்தேதி முது நிலை மருத்துவம் பயின்று வரும் மருத்துவர் பிரபாகரன்என்பவர் , தனது நண்பர்கள் இருவருடன்காரில் அவசரமாக வெளியில் புறப்பட்டுள்ளார். பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரை வேகமாக எடுத்த நிலையில் காரின் ஓரமாக படுத்திருந்த மூதாட்டி மீது அந்த காரின் சக்கரம் ஏறி இறங்கி இருக்கின்றது.
தன்னால் நிகழ்ந்த விபத்தை மறைப்பதற்காக, போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் , மருத்துவமனை ஊழியர்களை வரவைத்து மூதாட்டியை தூக்கிச்சென்று வெளியில் நடந்த விபத்து என்று சிகிச்சைக்காக சேர்த்து நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து விபத்தின் மூலம் மரணத்தை ஏற்படுத்துதல், அஜாக்கிரதையான செயல்பாடு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவர் பிரபாகரனை கைது செய்தனர்