கள்ளக்குறிச்சி அருகே நேற்று இரவு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக அரசு பேருந்தை மறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் பெண்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
கையை காட்டினால்தான் தங்களுக்கு தெரியுமென்று ஓட்டுநர், நடந்துநர் கூறிய நிலையில், கையை காட்டாமல் தானாக பேருந்து நிற்க வேண்டும் என்று பெண்கள் தகராறு செய்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
சம்பவத்தன்று இரவு சின்னசேலத்தில் இருந்து ஆறகளூர் நோக்கிச் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சின்னசேலம் பழைய பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது பேருந்து அங்கு நிற்காமல் சென்றது. இதனை பார்த்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று பேருந்தை வழிமறித்து நிறுத்தினார்.
அப்போது, போகிற வேகத்தில் அடித்து தூக்கியிருந்தால், நீ என்ன ஆகியிருப்பாய் என்று அந்த இளைஞரை பார்த்து ஓட்டுநர் கேட்டார். இதற்கிடையே, ஓடிச் சென்று பேருந்தில் ஏறிய பெண்கள் இரவு நேரத்தில் பேருந்தை ஏன் நிறுத்தவில்லை ? என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
கை காட்டினால் தான் பேருந்தை நிறுத்துவோம் ,நீங்கள் சேலம் செல்வதற்காக நிற்கிறீர்களா? அல்லது ஆத்தூர் செல்வதற்காக நிற்கிறீர்களா? எங்களுக்கு எப்படி தெரியும் என்று ஓட்டுனர் ஆவேசமாக கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அரசு பேருந்துன்னா கை காட்டாமலே நிறுத்த வேண்டும் என்று பெண்கள் குழுவில் உள்ள பெண் ஒருவர் ஓட்டுனருடனான வாக்குவாதத்தை வீடியோ எடுத்ததோடு, இந்த வீடியோ என்ன செய்ய போகிறது பாருங்க ? என்று அதனை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்
அரசு பேருந்தோ , தனியார் பேருந்தோ எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட நிறுத்தத்தில் பயணிகள் இறக்கம் இருந்தால் நின்று செல்லும் மற்றபடி பேருந்து நிறுத்தத்தில் உள்ளவர்கள் கை காட்டினால் மட்டுமே நின்று செல்லும் என்று கூறும் பேருந்து ஓட்டுனர்கள் நாங்கள் என்ன ஷேர் ஆட்டோவா ஓட்டுகிறோம் சாலையில் நிற்பவர்களை எங்கே போகனும் என்று கேட்டு கேட்டு ஏற்றிச்செல்ல என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக, இரவு நேரத்தில் பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள், பயணிகளிடத்தில் ‘கனிவுடன் செயல்பட்டால், இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
இதனிடையே, அரசுப் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுனர் கோவிந்தராஜ் மற்றும் நடத்துனர் ஆனந்தராஜ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.