44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, லேசர் ஒளிவெள்ளத்தில் துவங்கியது. 4 இசைக்கலைஞர்களின் ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. சிவமணி ட்ரம்ஸ் இசைக்க, ராஜேஷ் வைத்யா வீணை வாசிக்க, ஸ்டீபன் கீபோர்டு இசைக்க, நவீன் புல்லாங்குழல் வாசித்தார்.
நிகழ்ச்சியின் போது டிரம்ஸ் சிவமணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகே சென்று அவரை டிரம்ஸ் இசைக்கச் செய்தார்.
பறக்கும் பியோனோ, பறக்கும் ட்ரம்ஸ் என்ற பெயரில் அந்தரத்தில் மிதந்தபடி இசைக்கருவிகளை கலைஞர்கள் இசைத்தது பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை பிரதிபலித்த காட்சிப்பதிவில் ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுக்களும், கபடி மற்றும் கண்ணாமூச்சி போன்ற சிறார் விளையாட்டு மற்றும் பந்தாட்டம் குறித்த கலை நிகழ்ச்சிகளும் கண்களுக்கு விருந்தளித்தன.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் ஆடை அலங்காரத்தை பறைசாற்றும் நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டது.
சதுரங்க பலகையில் காய்களைப் போல் ராஜா, ராணி, சிப்பாய்கள் போன்று வேடமணிந்த கலைஞர்கள் நடித்துக் காட்டிய காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு நடத்தியது தொடர்பான காணொளியும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.