சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளின்படி, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை அவரவர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி, நாட்டு பற்றையும்,தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
தேசியக்கொடியை இரவில் இறக்க வேண்டியதில்லை என்றும், 3 நாட்கள் பறக்கலாம் என்றும், அதற்காக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.