கல்குவாரியில் சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சியை பயன்படுத்திய நபரை விசாரிக்க சென்ற சிஐடி காவலரை, மிரட்டி விரட்டிய புகார் நிரூபணமாகி உள்ளதால், ராம நத்தம் பெண் காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வசூலித்து , காவலருக்கு இழப்பீடாக வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
தன்னை ஒரு சினிமா மாடல் போலீஸ் ஆபிசராக காட்டிக் கொள்வதற்காக பத்திரிக்கையாளராக இருந்தாலும் சரி, சக போலீசாராக இருந்தாலும் சரி மரியாதை குறைவாக மிரட்டி உருட்டுவதில் வல்லவர் என்ற பெயருக்கு சொந்தக்காரரான காவல் ஆய்வாளர் புவனேஸ்வரிக்குத்தான் மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்துள்ளது..!
கடந்த 2019 ஆம் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுவதாக தகவல் அறிந்து ரவுடிகள் ஒழிப்பு பிரிவு சிஐடி காவலர் ராஜசேகர் அங்கு சென்று விசாரித்துக் கொண்டிருந்தார்
கல்குவாரி உரிமையாளர் கொடுத்த தகவலை கேட்டு புயல்வேக போலீசாக புவனேஸ்வரி, தலைமை காவலர் தண்டபாணியுடன் அங்கு வந்தார். தன்னுடைய எல்லையில் உள்ள கல்குவாரியில் சாதாரண போலீஸ் நீ எப்படி விசாரிக்கலாம்? என்று ஆரம்பித்து தரக்குறைவாக பேசி கடுமையாக மிரட்டியதாக புவனேஸ்வரியின் அடாவடி நடவடிக்கை குறித்து செய்தி வெளியானது இந்தநிலையில், காவலர் ராஜசேகருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது
காவல் ஆய்வாளர் புவனேஸ்வரியின் அத்துமீறல் நிரூபணமானதை தொடர்ந்து காவலர் ராஜசேகரின்மனஉளைச்சலுக்கு இழப்பீடாக தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், இழப்பீட்டுக்கான ஒரு லட்சம் ரூபாயை காவல் ஆய்வாளர் புவனேஸ்வரியிடம் 75000 ரூபாயும், தலைமை காவலர் தண்டபாணியிடம் 25000 ரூபாயும் வசூலித்துக் கொள்ளவும் அறிவுறுத்தியது. அதன்படி அவர்கள் இருவரிடம் இருந்தும் வசூலிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை காவலர் ராஜசேகரிடம் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் வழங்கினார்.