திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்ததால் 12 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தனியை சேர்ந்தவர் தனியார் நிறுவன காவலாளி பாலாஜி, இவரது மனைவி குபேந்திரி. கடந்த 2008 ஆம் ஆண்டு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த குபேந்திரி பிரசவத்துக்காக திருத்தனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்குழந்தை பிறந்தது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து 12 வருடம் கடுமையான வயிற்றுவலியால் குபேந்திரி கடும் அவதிக்குள்ளானார்.
2 வருடங்களுக்கு முன்பாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்த போது வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்திரிகோல் உள்ளே வைத்து தைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அந்த கத்திரி கோல் அகற்றப்பட்டது. இதையடுத்து தனது மனைவியின் வயிற்றில் கத்திரி கோலை வைத்து அஜாக்கிரதையாக தைத்த மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கணவர் பாலாஜி தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இ மெயில் மூலம் புகார் அனுப்பினார்.இந்த தகவல் செய்தியாக வெளியான நிலையில் இந்த புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன், இது குறித்து விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் அளித்த அறிக்கையின்படி, பாதிப்புக்குள்ளான பெண் குபேந்திரிக்கு பிரசவ அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் அஜாக்கிரதையாக நடந்து கொண்டது நிரூபணமாகி உள்ளதாக தெரிவித்துள்ள துரை செயச்சந்திரன், அறுவை சிகிச்சையை எச்சரிக்கையாக செய்திருந்தால் குபேந்திரி வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தத்திருக்க மாட்டார்கள் எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அந்த பணத்தை சம்மப்ந்தப்பட்ட மருத்துவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது போன்ற விவகாரங்களிலாவது மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்துது விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.