நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு செல்லும் நபர்கள், மதுபாட்டில் மற்றும் புகையிலைப் பொருட்கள் எடுத்துச்செல்ல தடை செய்யப்பட்டிருந்த நிலையில், கால்களில் டேப் ஒட்டி மதுபாட்டில் கடத்தியவர்கள், வன அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினர் . குடிமகன்களின் ராஜதந்திரம் வீணான தருணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
திருவிழாவின்போது பக்தர்கள் அரசுப் பேருந்துகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் கோவிலுக்கு மது, புகையிலை, சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனைக் கண்காணிக்க பாபநாசம் வனச்சோதனை சாவடி மற்றும் காணிகுடியிருப்பில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பேருந்துகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பக்தர்கள் சிலரிடம் இருந்து மதுபாட்டில்களும், புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் சில பக்தர்கள் தங்கள் கால்களில் டேப்புகளால் சுற்றி கூல்டிரிங்ஸ் பாட்டில்களில் ஊற்றி மதுபாட்டிலை கடத்தி வந்து சிக்கிக் கொண்டனர்.
பாட்டில்களில் இருந்த மதுவை கீழே ஊற்றிய போது மதுப்பிரியர் ஒருவர் மதுவை கொட்டவிடாமல் போராடிப்பார்த்தார்.அவர் கண் முன்னே குவார்ட்டர் பாட்டிலில் இருந்த ஆல்ஹகால் வாட்டர் முழுவதும் கீழே ஊற்றி அழிக்கப்பட்டது.
மதுவை எடுத்துச்செல்ல கையாண்ட தங்களது அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகி போனதே என்ற ஏக்கத்துடன் காணப்பட்டனர் குடிமகன்கள்..!
பக்தர்கள் கால்களில் மதுபாட்டில்களை கட்டி கோவிலுக்கு செல்ல முயன்ற வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..!