தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பிரசாரத்தை இன்று தொடங்கும் தலைமை தேர்தல் ஆணையம், இந்த பணியை அடுத்தாண்டு மார்ச் மாதத்துடன் முடிக்க திட்டமிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இப்பணிக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட படிவம் 6பி-யில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள், வீடு, வீடாக சென்று படிவம் வழங்கி வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணைய செயலிகள் மூலமாகவும் ஆதார் விவரங்களை வாக்காளர்கள் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.இதனிடையே, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழ்நாட்டில் திறம்பட மேற்கொள்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் போலி வாக்காளர் அட்டைகள் முற்றிலுமாக களையப்படும் என்றும் ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒரு இடத்தில் மட்டுமே இடம்பெற்றிருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.