ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்ட செல்போன் உள்பட ஏராளமான செல்போன்களை திருடி விற்று வந்த இரு போலீசார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் ஆயுதப் படையில் பணிபுரிந்த அசோக்குமார் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காவலர் தற்கொலையில் மர்மம் இருப்பதாக அசோக்குமார் உறவினர்கள் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் சென்றனர்.
பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு சம்பந்தப்பட்ட பொருட்களை ஒப்படைக்க சிபிசிஐடி போலீசார் கேணிக்கரை போலீசாரிடம் கேட்டுள்ளனர்.
அப்போது கேணிக்கரை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த அசோக்குமார் பயன்படுத்திய செல்போன் திருட்டு போனது தெரியவந்தது.
இதனையடுத்து திருட்டு போன செல்போன் குறித்து சிபிசிஐடி போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல்போன் வைத்திருந்தவர்களை அடையாளம் கண்டனர்.
அவரிடம் விசாரித்த போது இந்த செல்போனை ராமநாதபுரத்தில் உள்ள செல்போன் கடையில் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக சிபிசிஐடி போலீசார் அந்தக் செல்போன் கடைக்காரரிடம் விசாரித்தபோது கேணிக்கரை காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் இருவர் 2000 ரூபாய்க்கு இந்த செல்போனை விற்று விட்டு சென்றதாகவும், அவர்கள் இருவரும் இதுபோல் அடிக்கடி நிறைய செல்போன்களை கொண்டு வந்து விற்று செல்வார்கள் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டிஎஸ்பி ராஜா இன்ஸ்பெக்டர் மலைச்சாமி , எழுத்தர் சுரேஷ் , காவலர் கமலக்கண்ணனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.
அப்போது காவல் நிலைய எழுத்தர் சுரேஷ் மற்றும் காவலர் கமலக்கண்ணன் இருவரும் செல்போனை எடுத்து விற்றது தெரியவந்தது மேலும் இவர்கள் இருவரும் தொழில் அதிபர் மகள் காதல் விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட 80 சவரன் நகைகளை அபகரிக்கத்து விற்பனை செய்ததும் தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் போலிசார் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
வீட்டுல திருடு போனா காவல் நிலையம் போகலாம்.. அங்கேயே திருடு போச்சின்னா எங்கே போவது என்று சக போலீசார் கவலை தெரிவித்து வருகின்றனர்.