கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக்கு எதிரான கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தி அதனை வீடியோவாக எடுத்து முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் கெத்துக்காக பகிர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட வீடியோ ஆதாரத்தை கொடுத்து போலீசில் சிக்கும் போராளிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவரத்தில் தொடர்புடையவர்களை வீடியோ ஆதாரத்துடன் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தட்டி தூக்கி வருகின்றனர். போலீஸ் வாகனத்துக்கு தீவைத்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், பள்ளிக்கு தீவைத்து கலவரக் கும்பல் எரித்து முடித்த பின்னர் தாமதமாக வந்து இரு போராளி இளைஞர்கள், கருகிய வகுப்பிற்குள் புகுந்து பள்ளியின் கதவுகளை கழற்றி வந்து உடைத்து அதனை தங்களது வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ்சாக வைத்திருந்தனர்.
வீடியோ ஆதாரத்துடன் விசாரிக்கையில் அவர்கள் சங்கராபுரத்தை சேர்ந்த ராஜ்குமார், கார்த்தி என்பது தெரியவந்தது. அவர்கள பதிவு செய்த வீடியோவே அவர்களை கலவர வழக்கில் சிக்கவைத்து விட்டது. அதே போல எரிக்கப்பட்ட காரின் மீது ஏறி அதன் சைலன்ஸரை திருட முயற்சித்த இளைஞரையும் போலீசார் கைது செய்துள்ளனர்
சிறுவர்கள் விளையாடும் சாதனங்களை சேதப்படுத்திய இளைஞர்கள், வாலிபால் கம்பத்தை பிடுங்கி பள்ளியின் இரும்பு தடுப்பு கம்பிகளை கும்பலாக உடைத்து சேதப்படுத்திவர்களும் வீடியோவால் வசமாக சிக்கினர்
புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் கலவரத்தை நிகழ்த்தியவர்கள் என கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த அருண் குமார், கமல்ராஜ், ஸ்ரீதர், சின்னசேலம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கடலூர் மாவட்டம் அன்னாவள்ளி பகுதியை சேர்ந்த பாலமூர்த்தி ஆகிய 5 பேர்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் தாங்கள் செய்த கலவர சேட்டைக்கு ஆதாரமான வீடியோக்களை கெத்து என நினைத்து தங்களது முக நூல் மற்றும் வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்ததால் ஆதாரத்துடன் சிக்கி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..!