சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று கோலாகலமாகத் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 10ந் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டிக்காக மாமல்லபுரம் அருகே தனியார் ஓட்டலில் முழு அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் வருகை தந்துள்ளனர்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, இன்று மாலை 4.45 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வருகிறார்.மாலை 5.25 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு தளத்தில் இறங்கும் அவர், அங்கிருந்து காரில் நேரு உள்விளையாட்டரங்கிற்கு செல்கிறார்.
மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெறும் செஸ் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொண்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய-மாநில அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர். பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையம், நேரு உள் விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டிற்கு அரங்கிற்கு வரும் வாகனங்கள் அனைத்துமே முழுமையான சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. முறையான அனுமதி அட்டை வைத்திருக்கக்கூடியவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை நேரு விளையாட்டு அரங்கம் அருகே உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் சென்னை வருகை ஒட்டி, ரயில்வே காவல்துறை, ரயில் நிலையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.