செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க சென்னை வரும் பிரதமர் மோடி, அதற்கு மறுநாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்ள உள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி சென்னை காவல் ஆணையர் தலைமையில், நான்கு கூடுதல் ஆணையாளர்கள், கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் உள்பட 22 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், பிரதமர் தங்குமிடமான கிண்டி ஆளுநர் மாளிகை, சென்னை விமான நிலையம், அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள லாட்ஜுகள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் தங்குவோரையும், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களுக்கு வந்து செல்வோரையும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பிரதமர் வருகையையொட்டி, வரும் 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்கள், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதனிடையே, பிரதமர் மோடியின் தனி பாதுகாவலர்களான எஸ்.பி.ஜி. குழுவினர், பிரதமரின் பயண மார்க்கம் மற்றும் விழா நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளம், நேரு உள் விளையாட்டு அரங்கு உள்ளிட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார்.