தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டண ஆர்ப்பாட்டங்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் பெருந்திரளாக தொண்டர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை விரைவில் மாற்றியமைக்க உள்ளதாகவும், இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 27 ரூபாய் 50 காசுகளும், 301 முதல் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு 147 ரூபாய் 50 காசுகளும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை உயர்த்தும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய செங்கோட்டையன் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்களில் மக்களுக்கு எதையுமே செய்யவில்லை என்றார்.
நாமக்கல்லில் முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை தினமணி திரையரங்கம் அருகில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் பேருந்து நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.