சென்னை வேளச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கியதில் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஐ.டி.யில் பணிபுரிந்து வரும் அம்பிகா நகரை சேர்ந்த வெற்றிச்செல்வனும், அவரது நண்பர் சரணவனும் நேற்றிரவு மது அருந்திவிட்டு டான்சி நகர் அருகே டீக்கடைக்கு வெளியில் நின்று பக்கோடா சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது வெற்றிச்செல்வன் தனது காதலியுடன் செல்ஃபோனில் சத்தமாக பேசிக்கொண்டிந்ததை அங்கிருந்த வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
இதனால் ஏன் என்னையே பார்க்கிறாய் என கேட்டு வெற்றிச்செல்வன் அவருடன் வாய்த்தகறாரில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனே சுரேஷ் சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேரை வரவழைத்து வெற்றிச்செல்வனையும், சரவணனையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் வெற்றிச்செல்வனுக்கு தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற வேளச்சேரி போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்பதால் இது போன்று சம்பவங்கள் தொடர்வதாக கூறுகின்றனர்.