வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 44 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக காமராஜ் மற்றும் அவரது மகன்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021-ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் அவர் மீது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், விரிவான விசாரணைக்கு பின் வழக்கு பதிந்ததாக, திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கோவை மற்றும் சென்னையில் உள்ள காமராஜ் தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அடையாறு, நீலாங்கரை, இராயப்பேட்டை உள்பட 6 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.
மன்னார்குடி மற்றும் தஞ்சையில் உள்ள முன்னாள் அமைச்சரின் வீடு, அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் அதிகாலை முதலே சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீடு முன் குவிந்த ஏராளமான அதிமுக தொண்டர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 44 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் ஒரு கோடியே 39 லட்சத்து 54 ஆயிரமாக இருந்த காமராஜின் சொத்து மதிப்பு, 2021-ஆம் ஆண்டு முடிவில் 60 கோடியே 24 லட்சம் ரூபாயாக உயர்ந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது மகன்கள் நடத்தும் வாசுதேவ பெருமாள் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்திலும், NARC ஹோட்டல் என்ற நிறுவனத்திலும், கணக்கில் வராத பணத்தை பயன்படுத்தி முதலீடு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் அந்த FIR-ல் கூறப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜின் வீடு, அவரது உறவினரான ஆர்.ஜி. குமார் வீடு மற்றும் வேட்டைத் திடலில் உள்ள காமராஜின் நண்பர் சத்தியமூர்த்தி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார்குடியில் சோதனை நடைபெறும் காமராஜின் வீட்டுக்கு முன்பு ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சையில் முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன்கள் கட்டி வரும் காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையிலும் பூக்கார மன்னையார் தெருவில் வசித்து வரும் காமராஜின் சம்பந்தி மோகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இரண்டு இடங்களில் தலா 9 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் டாக்டர் இன்பனுக்கு சொந்தமான ஸ்கைலைன் அப்பார்ட்மெண்ட் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிபாளர் திவ்யா தலைமையிலான 8 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், திருச்சியில் 3 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. திருச்சி கே.கே.நகர் ஐயர் தோட்டம் பகுதியில் காமராஜூக்கு நெருக்கமானவர் என கூறப்படும் பாண்டியன் என்பவரது வீட்டிலும் திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலிலும், தில்லை நகர் பகுதியில் உள்ள காமராஜின் நண்பரான இளமுருகு என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.