வேலூரில் தனது வார்ட்டில் முறையாக பணி செய்யவில்லை எனக்கூறி தூய்மை பணியாளர்களை கவுன்சிலரின் கணவர் கடுமையான வார்த்தைகளால் திட்ட, பதிலுக்கு நீங்கள் எப்படி கேள்வி கேட்கலாம் ? என்று தூய்மைப்பணியாளர்கள் திருப்பிக்கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
வேலூர் மாநகராட்சியின் 44 வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த தவமணி. சில நாட்களாக இவரது வார்டில் தூய்மைப்பணி முறையாக நடைபெறவில்லை என்று பொது மக்கள் கவுன்சிலரின் கணவர் தாமோதரனுக்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து புகார் வந்த தெருவுக்கு தூய்மைப்பணியாளர்களையும் அவர்களை மேற்பார்வையிடும் அதிகாரிகளையும் போன் செய்து வரவழைத்த தாமோதரன், அவர்களை, காதால் கேட்கவே கூசும் ஆபாசமான வார்த்தைகளால் கடுமையாக திட்டி தீர்த்தார்.
50 லட்சம் ரூபாய் செல்வழிச்சி, தனது மனைவியை கவுன்சிலராக்கிவிட்டு, இந்த வேலையை செய்யிரதுக்கு உங்க பின்னால் தொங்கனுமா? என்று கேட்டு வசைமாரி பொழிந்த தாமோதரன், விளக்கம் கூற முயன்ற தூய்மைப்பணியாளரை பேசவிடாமல் தடுத்து தனது வார்ட்டில் இருந்து வெளியேறுமாறு மிரட்டலாக விரட்டினார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தூய்மை பணியாளர்கள் ஒன்று கூடி கேள்வி கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது ? என்று திருப்பி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் , கவுன்சிலரின் கணவர் பதறியபடியே பதுங்க ஆரம்பித்தார்
இந்த சம்பவத்தை அருகில் இருந்த தூய்மை பணியாளர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் சமூக வலைதளங்களில் பெண் கவுன்சிலர் கணவர் பேசியதை மட்டும் "காது கொடுத்து கேட்க இயலாத அட்ராசிட்டி" என்ற தலைப்பில் வைரலாகி வருகின்றது.
அதே நேரத்தில் தூய்மை பணியாளர்கள் குப்பை அகற்றும் பணியை சரிவர செய்யாமல் ஏமாற்றியதால், கவுன்சிலரின் கணவர் தாமோதரன்ஆத்திரத்தில் ஆவேசமாகி அப்படி பேசியதாக கவுன்சிலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.