ஓட்டல் என நினைத்து நள்ளிரவில் உதவி கமிஷனருக்கு போன் செய்து கிரில் சிக்கனும், ரொட்டியும் ஆர்டர் செய்து, விரைவாக கொண்டுவருமாறு கூறிய உதவி ஆய்வாளரின் ஆடியோ வெளியாகி உள்ளது...
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஃபரோக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பால்ராஜ். இவர் நாக்குகிற்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு அப்பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு அரேபிய உணவான கிரில் சிக்கனும் , 3 ரொட்டியும் உடனடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.
ஆனால், எதிர்முனையில் பேசியவர், அப்படி கொண்டு வர முடியாது என கூறியதால் கோபமடைந்த பால்ராஜ் ஏன்? என ஆவேசத்துடன் கேட்க, மறுமுனையில் இருந்து வந்த பதில் பால்ராஜின் பல்ஸை எகிற வைத்தது. நான் கோழிக்கோடு காவல்துறை உதவி கமிஷனர் சித்திக் என்று எதிர் முனையில் பேசியவர் கூறியதால் , தொடர்ந்து பலமுறை பால்ராஜ் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஓட்டல் என நினைத்து தன்னிடம் எஸ்.ஐ பால்ராஜ் உணவு ஆர்டர் செய்ததை மன்னித்த ஏ.சி.பி சித்திக் இதை காமெடியாக எடுத்துக் கொள்ளலாம் வேறு பிரச்சனை இல்லை எனக் கூறி அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த எஸ்.ஐ. பால்ராஜை சகஜ நிலைக்கு திருப்பினார்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்ட செல்போன் உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.