மகளை தாக்கிய மாப்பிள்ளையை விருந்துக்கு வந்த இடத்தில் மாமியார் வீதியில் வைத்து உருட்டு கட்டையால் புரட்டி எடுத்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே அரங்கேறி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்து ஜிஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு பிரீத்தா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் போதையில் அடித்து உதைத்ததால் மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவியை சமாதானம் பேசி அழைத்து வர ஈஸ்வரன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். மகளை தாக்கியதால் ஆத்திரத்தில் இருந்த தாய் கவிதா
தனது உறவினர்களுடன் சேர்ந்து மாப்பிள்ளை ஈஸ்வரனை வீதியில் வைத்து உருட்டுக்கட்டையால் புரட்டி எடுத்தார்.
ஈஸ்வரனுடன் வந்த உறவினரையும் விரட்டி விரட்டி தாக்கிய மாமியார் கவிதா, எழுந்து செல்ல முயன்ற மாப்பிள்ளை மீது கல்லால் எறிந்து எழுந்து நடக்க இயலாமல் செய்தார்
இதனால் முகத்தில் வழிந்த ரத்தத்துடன் நடக்க இயலாமல் வீதியில் தவித்த ஈஸ்வரனை, அக்கம்பக்கத்தினர் தூக்கிச்சென்று, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மாமியாரின் ஆவேச தாக்குதலில் ஈஸ்வரனின் காலில் முறிவு ஏற்பட்டிருப்பது மருத்துவர்கள் பரிசோதனையில் தெரியவந்தது. அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோ ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.