நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் பலியாகவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியம், 6 மாதமாக சிகிச்சையில் இருந்த அவருக்கு, ரத்தம் சார்ந்த மாற்று உறுப்புகள் கிடைக்காததால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் இதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுத்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததாக சொல்லப்படும் தகவல் தவறு ஆகும். அவர், கடந்த டிசம்பர் மாதம் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே 'ஆக்சிஜன்' உதவியுடன்தான் சிகிச்சையில் இருந்துள்ளார்.
அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 6 மாதமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் தான் இருந்தார் என்று மா.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டி உள்ளார்.
மீனாவின் கணவருக்கு இருதயம், நுரையீரல் ஆகிய 2 உறுப்புகள் செயலிழந்துவிட்டதால், 95 நாட்கள் 'எக்மோ' சிகிச்சை பிரிவில் இருந்ததாகவும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்துவந்ததாகவும், கடந்த பிப்ரவரி மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர், தற்போது கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவ மனையில் வித்யாசாகர் சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும், அவரது ரத்தம் சார்ந்த 2 உறுப்புகள் தானமாக கிடைத்தால் முன்னுரிமை கொடுத்து அவரை காப்பாற்றுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையின் பேரில் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த நிலையில் அவருடைய துரதிருஷ்டம் எந்த ஊரிலும் அவருக்கான உறுப்புகள் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார் மா .சுப்பிரமணியன்