தூத்துக்குடியில், முதன்முறையாக பள்ளி சென்ற நான்கரை வயது பள்ளி மாணவன் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் இருந்து நெல்லையில் உள்ள தனியார் பள்ளிக்கு தினந்தோறும் ஆட்டோவில் பள்ளி மாணவர்கள் சென்று வருவது வழக்கம்.
அந்தவகையில், இன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்ற ஆட்டோ, அனவரதநல்லூரில் எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் முதன்முறையாக பள்ளிக்கு சென்ற செல்வ நவீன் என்ற நான்கரை வயது மாணவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான். மேலும், ஆட்டோவில் சென்ற 7 மாணவ-மாணவிகள் காயமடைந்தனர்.
மாணவர்களை அழைத்து சென்ற வேளையில், ஆட்டோ ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டு கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
விபத்தில் காயடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடிவருகின்றனர்.