தூத்துக்குடி அருகே மின்வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றிய ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக, லைன் மேனுக்கு இரவு பணி கொடுத்த மின்வாரிய அதிகாரியை சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை கே.டி.சி, நகரைச் சேர்ந்தவர் ஆனந்தபாண்டி . 51 வயதான இவர் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். லைன் மேன்களை கண்காணிப்பது அவர்களுக்கு பணி நேரம் ஒதுக்குவது இவரது முக்கிய பணியாகும்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்த போது ஆனந்த பாண்டியன் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் தலைமையில் 4 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை தொடர்பாக குறிப்பன்குளம் கிராமத்தை 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவன் அளித்த வாக்குமூலம் அதிர வைப்பதாக இருந்தது.
அந்த சிறுவனின் தந்தை ராஜா என்பவர், நாசரேத் மின் நிலையத்தில் லைன் மேன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு பகலில் டூட்டி கொடுக்காமல் இரவில் மட்டுமே டூட்டி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அவர் கடுமையான மன அழுத்தத்துடன் பணிக்கு சென்று வந்த ராஜா, கடந்த ஆண்டு இரவு மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கு முழு முதற் காரணம் மேல் அதிகாரியான ஆனந்த பாண்டி தான், என்ற ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய கடந்த ஓராண்டாக முடிவு செய்து அவரை கண்காணித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்படி அவனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கடந்த 22ஆம் தேதி பணியில் இருந்த ஆனந்த பாண்டியை அரிவாளால் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு 5பேரும் தப்பி ஓடி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெதிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, நாசரேத் சர்ச் தெருவை சேர்ந்த இரு சிறுவர்களை கைது செய்த போலீசார் இருவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.