கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தன்னுடைய பேரனுடைய முகத்தில் நாய் கடித்ததற்கு முதல் உதவி சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்திய பெண் மருத்துவரை கண்டித்து தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் ஆவேசமாக எச்சரித்த நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சிவகொழுந்து. தே.மு.தி.க முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். இவரது மகள் சுகன்யா. சம்பவத்தன்று சிவகொழுந்துவின் பேரன் நிவின் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது நாய் ஒன்று சிறுவனின் முகத்தில் கடித்து விட்டது.
இதையடுத்து தாய் சுகன்யா தனது மகனுடன் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.
அங்கு சிறுவனின் முகம் இரத்தமாக இருப்பதாக கூறி முதல் உதவி சிகிச்சை அளிக்க மறுத்ததுடன், முகத்தை கழுவி சுத்தமாக அழைத்து வரும்படி அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்ப இடத்துக்கு சென்ற சிவக்கொழுந்து, காயத்துடன் வருபவர்களை டிரஸ்ஸிங் செய்து முதலுதவி செய்யாமல் மெத்தனமாக அலைக்கழிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியதோடு, மருத்துவரை எச்சரித்ததாக கூறப்படுகின்றது.
இதனை பணியில் இருந்த பெண் மருத்துவர் தனது செல்போனில் படம் பிடிப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்த சிவகொழுந்து, பதிலுக்கு தானும் செல்போனில் படம் பிடிப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆவேசமானார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரையும், அவருடன் வந்தவர்களையும் சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சிவக்கொழுந்து உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு பெற்றோருக்கும் அவர்களது குழந்தைகளின் உயிர் முக்கியம் அதே நேரத்தில், அரசு மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவருக்கு அனைவரது நலத்தின் மீதும் அக்கறை இருக்கும் என்பதை, மனதில் கொண்டு, அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.