கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி நகைகளை லட்சக்கணக்கான ரூபாய்க்கு அடகு வைத்து மனைவி மற்றும் பெண் நண்பருடன் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த முடிதிருத்தும் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் முதலார் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சித்திரங்கோட்டில் நகை அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் இளம்பெண் ஒருவர் 9 கிராம் எடை கொண்ட வளையல் ஒன்றை 30 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து பணத்தை பெற்று சென்றுள்ளார். மாலையில் கடைக்கு வந்த சுரேஷ் அடகு பிடித்த நகைகளை சரிபார்த்த போது அந்த இளம்பெண் கொடுத்தது போலி வளையல் என்பது தெரிய வந்தது.
சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது சொகுசு காரில் ஒரு ஆணுடன் வந்த இறங்கிய இளம்பெண் போலி நகையை அடகு வைத்து சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வேர்கிளம்பி பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த சொகுசு காரை மடக்கி விசாரித்தனர். அப்போது காரை ஓட்டி வந்தவர் செட்டிகுளத்தைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியான ஜேசுராஜா என்பதும், மனைவி மற்றும் பெண் நண்பருடன் சொகுசு வாழ்க்கை நடத்த போலி நகை மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
கேரளாவில் இருந்து கவரிங் வளையல்களை வாங்கி வந்து, சிறிய நகை அடகு பிடிக்கும் கடைகளில் பெண் நண்பரை அனுப்பி, அவசர தேவைக்கு அடகு வைப்பது போல் நாடகமாடி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடி பணத்தில் மனைவிக்கு 3 மாடியில் பங்களா வீடு கட்டிக் கொடுத்தும், பெண் நண்பருடன் காரில் பல்வேறு பகுதிகளுக்கு இன்ப சுற்றுலா சென்று அறை எடுத்து தங்கியும் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து சொகுசு காரை பறிமுதல் செய்து ஜேசுராஜாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் பெண் நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.