தாம்பரத்தில் பெண்கள் விடுதியின் உள்ளே ஏறிக்குதித்த நேபாளி இளைஞர் ஒருவர், தப்பிக்கும் முயற்சியில் சுவர் ஏறிக்குதித்ததால் காலில் எலும்பு முறிந்து சிக்கிக் கொண்டார். வழக்கை விசாரிக்க சோம்பல் பட்டு கால் முறிந்த நேபாளியை பெருங்களத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் போட்டுச் சென்ற தாம்பரம் போலீசாரின் மெத்தனம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை பெருங்களத்தூர் குடியிருப்பு பகுதியின் சாலையில் நடக்க சிரமப்பட்டு நேபாள நாட்டு இளைஞர் ஒருவர் தட்டுத் தடுமாறி தவழ்ந்து வந்தார்.
அங்குள்ள குடியிருப்புவாசிகள் சந்தேகத்துக்கு இடமான அந்த நபர் குறித்து பெருங்களத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து அந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது அவர் பெருங்களத்தூரில் உள்ள பெண்கள் விடுதிக்குள் ஏறிக் குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட தகவல் தெரியவந்தது
பெண்களின் விடுதி குளியல் அறைக்குள் சென்றவனைக் கண்டு பெண்கள் கூச்சலிடவே விடுதியின் காப்பாளர் அந்த நபரை பிடிக்க முயற்சி செய்த போது அங்கிருந்து தப்பிக்க முயன்ற அவர், மாடியிலிருந்து குதித்துள்ளார்.
அப்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து வைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவித்தனர்.
அங்கு வந்த தாம்பரம் போலீசார் மகளிர் விடுதிக்குச் சென்று பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த அந்த நேபாள ஆசாமியை, தாம்பரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இரவு நேரம் என்பதால் காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் இவரை ஏன், அழைத்து வந்தீர்கள் எங்காவது அனுப்பி வையுங்கள் என்று கண்டித்ததாகக் கூறப்படுகின்றது.
அந்த நபர் யார்? எதற்காக மகளிர் விடுதிக்குச் சென்றார்? இவர் எங்கு தங்கியுள்ளார்? இவரது பின்னணி என்ன? என்று கூட விசாரிக்காமலும், காயமடைந்த அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்காமலும் தாம்பரம் போலீசார் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தாம்பரம் காவல் எல்லையை தாண்டி பழைய பெருங்களத்தூரில் உள்ள மக்கள் குடியிருக்கும் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பெருங்களத்தூர் போலீசார் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததன் பேரில், எந்த இடத்தில் விட்டு சென்றானரோ அங்கேயே சென்ற போலீசார், அந்த நபரை அழைத்துக் கொண்டு தாம்பரம் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
லேடீஸ் ஹாஸ்டலுக்குள் சென்று வந்ததால் கால் முறிந்து அவதிப்பட்ட அந்த நேபாளி இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நோயாளியான அந்த நேபாளியின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.