வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய காவலரிடம், 12 லட்சம் ரூபாய் கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண்ணை கடலூர் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த காவலர் செல்வகுமார் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு அந்த பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணிடம் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வட்டியும் முதலும் முழுவதுமாக கொடுத்து விட்ட நிலையில் அந்த பெண்ணிடம் போலீஸ்காரர் எழுதிக் கொடித்த கடன் பத்திரம் இருந்துள்ளது. வட்டி கொடுக்க வேண்டும் எனக்கூறி கடன் பத்திரத்தை அனிதா கொடுக்க மறுத்த நிலையில், தன்னிடம் இருந்த வெற்று பத்திரத்தில் 12 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறி அதனை வைத்து காவலர் செல்வகுமாரை மிரட்டத் தொடங்கியுள்ளார்.
தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி அளிக்க மறுப்பது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் 'நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உன்னை வேலையை விட்டு தூக்கி விடுவேன்' எனவும் மிரட்டி உள்ளார்.
இதனால் அச்சமடைந்த செல்வகுமார் இதுகுறித்து புகார் அளிக்க கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த ஒன்றாம் தேதி புகார் கொடுக்க வந்துள்ளார். புகார் அளிக்க செல்லும் போது விஷம் சாப்பிட்டு விட்டு வந்த நிலையில் கடலூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே மயங்கி விழுந்துவிட்டார்.
அதனை தொடர்ந்து அவருக்கு கடலூர் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்தார் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.
இறந்த செல்வகுமாரின் தந்தை கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் அனிதாவின் கந்துவட்டி கொடுமை காரணமாக தன்னுடைய மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கந்துவட்டி அனிதாவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனிதாவிடம் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் இதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட அனிதாவை கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்