நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 3 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் எதிரே உள்ள லெட்சுமி திரையரங்கிலும் விக்ரம் திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது.
சனிக்கிழமை காலை 11மணி காட்சி ஓடிக்கொண்டு இருக்கும் போது இடைவேளைக்கு பின்னர் திரையில் சவுண்டு இல்லமால் ஊமைப்படம் போல ஓடியுள்ளது.
திரையரங்கில் ஆடியோ பிரச்சினை இருப்பதாகவும், அதனை சரி செய்து கொண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் சரியாகி விடும் என்று திரையரங்கு நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால் 1 மணி நேரத்திற்கு மேலாகியும் ஆடியோ சரி செய்யவில்லை என்பதால் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஆத்திரமடைந்து தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
திரையரங்கு நிர்வாகம் முழுமையான பணம் தரமுடியாது பாதி பணம் தான் தரமுடியும், இல்லையென்றால் ஆடியோ சரியாகும் வரை காத்திருந்து படத்தினை பார்த்து செல்லுங்கள் என்று கறாராக கூறியதால் வாக்குவாதம் முற்றியது.
இது குறித்து தகவல் கிடைத்தும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். முதலில் பாதி பணம் தான் தருவோம் என்ற திரையரங்கு நிர்வாகம் நிலைமை கைமீறி போவதை உணர்ந்து டிக்கெட்டிற்கு வசூலித்த முழு பணத்தினையும் திரும்ப தர நடவடிக்கை எடுத்தனர்.
இதையடுத்து வசூலிக்கப்பட்ட பணம் முழுவதும் ரசிகர்களுக்கு அப்படியே திருப்பிக் கொடுக்கப்பட்டது