1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் தருவதாக ஆசைக் காட்டி வாடிக்கையாளர்களிடம் ரிசர்வங்கியின் விதிகளை மீறி கோடிக்கணக்கில் முதலீடுகளை பெற்று வந்த ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்கள் இருவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டியாக வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டதை நம்பி ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துவருவது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரின் கவனத்துக்கு வந்தது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 26 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் , ரிசர்வங்கியின் விதிகளை மீறி , ஆசை வார்த்தைகளை கூறி மக்களிடம் சட்ட விரோதமாக முதலீகளை பெற்று அவற்றை மோசடி செய்யும் திட்டத்தில் அந்த நிறுவனம் செயல்படுவது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியானது.
இதையடுத்து ஆரூத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனர்கள் பாஸ்கர், மோகன் பாபு ஆகியோரை கைது செய்த போலீசார், மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். மக்களிடம் மோசடியாக பணம் வசூலித்து வந்த 26 அலுவலகங்களும் இழுத்துப்பூட்டப்பட்டது. ராணிபேட்டையில் ஆருத்ரா அலுவலகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை கேட்டு ஊழியரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு சோதனைக்கு வந்திருந்த போலீசார் அவரை சமானப்படுத்த முயன்றாலும் அமைதியாகாமல், தான் மூட்டை தூக்கி சம்பாதித்த பணம் என்று கூறிய அவர் முதலீடு செய்த தனது பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதம் செய்தார்.
போலீசார் அவரை எச்சரித்ததால் மிகுந்த வேதனையுடன் அங்கிருந்து சென்றார்.
அதே போல 26 அலுவலகங்களில் இருந்து 6 மடிக்கணினி, 44 செல்போன்கள்,60 சவரன் நகைகள், 3 கோடியே 41 லட்சம் ரொக்கப்பணம், 11 வங்கிகளில் உள்ள வங்கி கணக்கு விரங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி அவற்றை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை அதிகாரிக்கு மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் பாஸ்கர், மோகன்பாபு உள்ளிட்ட 7 பேரும் எந்த இடத்திலும் தங்களது முகத்தை காட்டாமல், திருப்பூரில் நடைபெற்ற பாஸி போரெக்ஸ் மோசடி பாணியில் புதிய நபர்களை முதலீட்டில் சேர்த்து விடுபவர்களுக்கு தங்க காசுகளை கொடுத்தும் ஏராளமான வாடிக்கையாளர்களை மோசடி வலையில் சிக்க வைத்துள்ளனர்.