மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோவிலில் சாமி கும்பிட வந்த மூதாட்டியை அர்ச்சகர் ஒருவர் தாக்கி இழுத்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை தல்லாகுளம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கள்ளழகர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் நியமிக்கப்பட்ட முதல் அர்ச்சகரான மாரிசாமி என்பவர் கடந்த 3 வருடங்களாக கோயிலில் பூஜை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று கோவிலுக்கு வந்த லட்சுமி என்னும் மூதாட்டி கோவிலில் உள்ள செடியில் இருந்து பூக்களை பறித்ததை பார்த்த மாரிச்சாமி அந்த மூதாட்டியை திட்டியதாகவும், பதிலுக்கு மூதாட்டியும் வசைபாடியதாகவும் கூறப்படுகின்றது. இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதில் ஆவேசமான அர்ச்சகர் மாரிச்சாமி அந்த மூதாட்டியை அடித்து கீழே தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது
அருகில் இருந்த பெண்கள் சமாதானம் செய்த நிலையில் அந்த மூதாட்டி தொடர்ந்து வசைபாடியதால் ஆத்திரம் அடைந்த அர்ச்சகர் மாரிச்சாமி, மூதாட்டியை கையை பிடித்து தர தரவென்று இழுத்துச்சென்று கோவிலுக்கு வெளியே தள்ள முயன்றார். வழியிலேயே அந்த மூதாட்டி கீழே விழுந்தார்
சுதாரித்து எழுந்த அந்த மூதாட்டி அர்ச்சகருக்கு தக்க பதிலடி கொடுக்க கீழே கிடந்த கல் ஒன்றை எடுக்க முயன்றார். இதையடுத்து அர்ச்சகருக்கு ஆதரவாக வந்த பெண்கள் ஓடிவந்து அந்த மூதாட்டியை இழுத்து கோவிலுக்கு வெளியே கொண்டு போய் விட்டனர்
மன வேதனை தீர கோவிலுக்கு வந்த இடத்தில் அர்ச்சகரால் ஆபாச வார்த்தையால் திட்டி, மூதாட்டி அடித்து விரட்டப்பட்ட சம்பவம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தோரை வேதனைக்குள்ளாக்கியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
அர்ச்சகரின் இந்த தாக்குதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கள்ளழகர் கோவில் இணை ஆணையரிடம் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கேட்ட போது, இது தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்தார்