வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகை அடகு வைக்கும் கடையின் சுவற்றில் துளையிட்டு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேர்காடு கூட் ரோட்டில் அனில்குமார் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையை இன்று காலை வழக்கம் போல் திறந்த போது உள்ளே இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மாயமாகி இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், உள்ளே சென்று பார்த்தபோது அடகு கடைக்கு பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் சுவரும், நகை அடகு கடையின் சுவரும் துளையிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி ஆய்வு செய்தார்.