சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக வரும் 27ஆம் தேதிக்கு பதில் 23ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. நாளை மறுநாள் பருவமழை தொடங்கும் அறிகுறிகள் இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் 14 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 7 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு உள்ளனர்.
இதற்கிடையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கலுக்கு 45ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை இன்னும் சில நாட்களில் முழுக் கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி மற்றும் கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.