பருத்தி, நூல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க இந்திய பருத்தி கவுன்சிலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதனிடையே, பருத்தி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தினார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் பருத்தி உற்பத்தி சார்ந்த வர்த்தகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பருத்தி மற்றும் நூலை முதலில் உள்நாட்டுத் தொழிலுக்கு வழங்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்திய பியூஷ் கோயல், மீதமுள்ளவற்றை ஏற்றுமதிக்குப் பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்தார்.
உள்நாட்டு தொழில்துறை பாதிப்படையும் வகையில் ஏற்றுமதி இருக்கக் கூடாது என அறிவுறுத்திய அவர், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வுக்குத் தீர்வு காணப்படும் என்றார்.
இந்நிலையில், பருத்தி நிபுணரான சுரேஷ் அமிர்தலால் கோடக் தலைமையில் இந்திய பருத்திக் கவுன்சில் அமைக்கப்பட்டதாகவும், இந்த கவுன்சிலின் முதல் கூட்டம் மே 28ஆம் தேதி நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்தக்கோரி பியூஷ் கோயலிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தினார். தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் இடையூறுகள் குறித்து மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் எடுத்துரைத்ததாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.