வரலாறு காணாத அளவில் பஞ்சு விலை உயர்ந்துள்ளதால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நூற்பாலைகளில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகள் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யும் பஞ்சை நூலாக நூற்றுப் பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
சில நாட்களுக்கு முன் 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு 97 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு இலட்ச ரூபாய் வரை விற்பனையானது. இப்போது ஒரு இலட்சத்து மூவாயிரம் முதல் ஒரு இலட்சத்து ஏழாயிரம் ரூபாய் வரை பஞ்சு விலை உயர்ந்துள்ளது.
மத்திய அரசு இறக்குமதி வரியை நீக்கிய பின்னும் பஞ்சுவிலை குறையாததால் அதிர்ச்சியடைந்த நூற்பாலை உரிமையாளர்கள் ஆலைகளின் செயல்பாட்டைக் குறைத்துள்ளனர். இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.