புதிதாக வாங்கிய டிவி பழுதான நிலையில், வாரண்டி கால அவகாசம் இருந்தும், வாடிக்கையாளரை அலைக்கழித்த வழக்கில் வீடியோகான் நிறுவனமும் , டிவியை விற்பனை செய்த கடை உரிமையாளரும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க திருவண்ணாமலை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ரெண்டேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் நாகராஜன். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்மர் 31 ந்தேதி இவரது சகோதரி , செங்கத்தில் உள்ள சக்திமுருகன் ஏஜென்ஸியில் வீடியோகான் 50 இன்ச் எல்.இ.டி டிவி ஒன்றை 49,500 ரூபாய் விலை கொடுத்து வாங்கி நாகராஜனுக்கு கொடுத்துள்ளார். அந்த டிவிக்கு 3 வருடம் வாரண்டி என்று டிவியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த நிலையில் வாரண்டி காலத்திற்கு முன்னதாகவே அந்த டிவி பழுதானதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து வாரண்டிக்கான கால அவகாசம் இருப்பதை சுட்டிக்காட்டி டிவியை சர்வீஸ் செய்து தருமாறு நகராஜன் , டிவி விற்ற சக்திமுருகன் ஏஜென்ஸியில் முறையிட்டுள்ளார். அதற்கு வீடியோகான் நிறுவனம் தனது தயாரிப்பை நிறுத்திக் கொண்டதாக கூறி இழுத்தடித்துள்ளனர்.
மேலும் இலவசமாக சர்வீஸ் செய்வதற்கு பதிலாக பணம் வாங்கிக் கொண்டு சர்வீஸ் செய்த சம்பந்தப்பட்ட சர்வீஸ் நிறுவனத்தினர், அதனையும் முழுமையாக செய்யாமல் டிவியில் பேனல் பழுதாகி விட்டதால் ஆர்டர் செய்து வாங்கி வருவதாக கூறி நழுவிச்சென்றதாக கூறப்படுகின்றது. வாரண்டிக்கான கால அவகாசம் இருந்தும் அந்த டிவியை சரிசெய்து கொடுக்காமல் வாரக்கணக்கில் நாகராஜனை ஏமாற்றி அலைக்கழித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் வீடியோ கான் நிறுவனம் , டிவியை விற்ற சக்திமுருகன் ஏஜெண்ஸி ஆகியோர் மீது நாகராஜன் திருவண்ணாமலை நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். பணம் கொடுத்து டிவி வங்கிய வாடிக்கையாளருக்கு , வாரண்டிகாலம் இருந்தும் டிவியை முறையாக இலவசமாக பழுது நீக்கி கொடுக்காமல் அலைக்கழித்து மன உளைச்சளை ஏற்படுத்தியதால் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் வழக்கு செலவிற்கு 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு கோரி இருந்தார்.
இந்த வழக்கில் மஹாராஷ்டிராவில் உள்ள வீடியோகான் நிறுவனம், மற்றும் செங்கம் சக்தி முருகன் ஏஜென்ஸிக்கு வாய்தா நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் வழக்கறிஞர் நாகராஜனுக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவிற்காக கூடுதலாக 5 ஆயிரம் ரூபாயும் வீடியோகான் நிறுவனமும், சக்தி முருகன் ஏஜெண்ஸியும் வழங்க வேண்டும் என்று நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார். ஒரு மாதத்திற்குள் இந்த இழப்பீட்டை வழங்க தவறினால் 7 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன்னில் விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களின் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் கூட இதுபோன்று நீதிமன்றத்தை நாடி வாடிக்கையாளர்கள் தங்களுக்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கும் சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், நம்பிக்கையுடனும் சட்டத்தை அணுகினால் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.