நெல்லையில் சாலை விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்ட மரம் சாய்ந்து சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்த விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலியாகினர்.
பாபநாசத்தில் இருந்து திருச்செந்தூர் வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த சாலையோரம் உள்ள மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பத்தமடை பகுதியில் பெரிய மரம் ஒன்றை ஜே.சி.பி.யை கொண்டு வேரோடு அகற்ற முயன்றதாக சொல்லப்படும் நிலையில், திடீரென மரம் சாய்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது.
இதில், ஆட்டோ நொறுங்கியதோடு, ஓட்டுநரும், அதில் பயணம் செய்த பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றியும், மரங்கள் அகற்றப்படுவதை குறிக்கும் வகையில் சாலையில் தடுப்பு அமைத்து வாகன ஓட்டிகளை நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தவும் தவறியதாக கூறி அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், 3 மணி நேரம் நெல்லை - பாபநாசம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.