தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கியது. மொத்தம் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
இது தவிர தனித்தேர்வர்கள் 28,353 பேரும், மாற்றுத்திறனாளிகள் 3,638 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறைக்கைதிகள் 73 பேரும் எழுதுகின்றனர். சரியாக10 மணிக்கு தேர்வு துவங்கிய நிலையில், காலை 8 மணிக்கெல்லாம் மாணவ, மாணவியர்கள் தேர்வு மையங்களுக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் அனைவரும் உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க 3050 பறக்கும் படைகளும், 1,241 நிலையான பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபடுகின்றன. ஆள்மாறாட்டம், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.
பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சென்னை சாந்தோமிலுள்ள புனித ரபேல் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார். மாணவர்கள் அச்சமின்றி, தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.