தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையிலும், பேருந்தில் இருந்த 55 பயணிகளையும் பத்திரமாக பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்த , அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவர், ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது. பேருந்தை ஓட்டுனர் மீசை முருகேச பாண்டியன் ஓட்டிச்சென்றார்.
சாத்தான்குளத்திற்கு முன்பாக கருங்கடல் பகுதியில் பேருந்து வந்தபோது பேருந்து ஓட்டுநர் மீசை முருகேசபாண்டியன் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு நடத்துனரிடம் தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்ட முருகேச பாண்டியன், "பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு அவசர தேவைக்காக சாத்தான்குளம் நோக்கி செல்கின்றனர். அதனால் உடனே பேருந்தை எடுத்துக்கொண்டு சாத்தான்குளம் சென்றுவிடலாம்" என பேருந்து நடத்துனரிடம் கூறியுள்ளார்.
தொடர்ந்து சாத்தான்குளம் பேருந்து நிலையத்திற்கு அந்த பேருந்து வந்தவுடன் பேருந்திலிருந்து இறங்கிய ஓட்டுநர் மீசை முருகேசபாண்டியனை, பேருந்து நடத்துனர் மற்றும் நேரக் காப்பாளர் ஆகியோர் ஆட்டோவில் ஏற்றி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சென்ற மீசை முருகேசபாண்டியன், மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது உடல் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள அவரது மகன் வந்தவுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என சக ஓட்டுனர்கள் தகவல் தெரிவித்தனர்.
தனக்கு நெஞ்சு வலி வந்தாலும் பேருந்தில் பயணம் செய்த 55 பயணிகளுக்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டு பத்திரமாக பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்த பின்னர் உயிரிழந்ததாக மீசை முருகேசன் பாண்டியனுக்கு சக ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து பயணிகள்
அஞ்சலி செலுத்தினர்.